திங்கள், 30 ஜூன், 2014

கண்ணீருடன் விளக்குகள்


நந்திக்கடல் சற்று மிதமாகவே
ஓலமிட்டு அழுகின்றது
காலை வானம் கூட
வழமைக்கு மாறாய்
ரத்தமாய் சிவந்து விடிகின்றது
விடிந்த வந்து சூரியனை
கரிய மேகங்கள்
கடுதியாக வந்து மறைக்கின்றன
வானத்தில் மீண்டும் வெடியோசை
மின்னல் கொடி தாவிப் படர்கின்றது
கண்ணீர்த் துளிகளாய்
ஓவென்ற அழுகுரலோடு
கோடையிலும் மழை
முல்லிவாய்க்கால் மண்
மீண்டும் ரத்த சிவப்பை
நினைத்து அலறுகின்றது
உறவுகளை நினைத்து
அழுவதற்கும் தடையுத்தரவு
பொத்திய வாய்களில்
வெடித்து சிதறுகின்றன
விம்மல்களும் விக்கல்களும்

கொத்து குண்டில் விழுந்தவர்
பங்கர் மண் சரிந்ததால் புதைந்தவர்
தண்ணீர் கேட்டபடியே மூச்சடக்கியவர்
உடனிருந்தோர் உயிர் பிடித்ததோட
விழித்த விழிகளால்
பார்த்தபடியே பரலோகம் போனோர்
கருப்பையில் இருந்து
எட்டி பார்க்குமுன்னே
கருகிய குஞ்சுகள்
இறந்த தாயின்
வெற்று முலை சப்பியபடி
சவமாகிய குழந்தைகள்
அள்ளி எடுத்த சதைப்பிண்டங்கள்
அங்கிங்கென சிதறிய அவயவங்கள்

இத்தனையும்
இத்தனை ஆண்டுகளின் பின்னரும்
இன்று பார்த்தது போல
நினைவுக்குள் வருகின்றது

இது மே 18

இன்று ஐந்தாண்டு
இன்னும்
சர்வதேசத்திடமிருந்து
சரியான நீதியான
பதிலில்லை

இன்றும் ஏங்கியபடி
எதிர்பார்ப்புகளுடன்
எதிலிகளான தமிழினம்
ஏந்துகின்றது கண்ணிருடன்
ஏற்றப்பட்ட விளக்குகளை
விம்மல்களுடன்...

வல்வையூரான்

Post Comment

3 கருத்துகள்:

  1. வேதனை மிகுந்த வரிகள் ..

    பதிலளிநீக்கு
  2. வலிகளும் கனவுகளும்
    நிறைந்திருக்கும் வரிகள்..
    நலம் பெரும் வாழ்வு
    அமையும் நாள் வரும்..

    பதிலளிநீக்கு
  3. கவிதை எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்கவர் நீங்கள் . உங்கள் கவிதைக்கு சந்தோசமாக வாழ்த்து சொல்ல முடியவில்லை .தொடர்ந்தும் எழுதுங்கள் வல்வையூரான் .

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.