செவ்வாய், 29 ஜூலை, 2014

நீ மீளும் நாளேது


காலம் காத்தால
கிழக்கு வெளிக்க முதல்
கருக்கலில் விளக்கெடுத்து
காடுபோய் வந்து

சனி, 26 ஜூலை, 2014

கனவுகளும் விழிக்கும் ஈழத்தில்


இளைஞர்களே கனவு காணுங்கள்
இவ்வண்ணம் கலாநிதி அப்துல்கலாம் சொன்னாராம்.
இனிப்பாய் இலட்சியமாய் கனவுகள் காண
இலட்சியத்தின் கனவுகள் எங்களுக்கும் இருக்குது.

நீண்ட மூச்சு உள் இழுத்து
நிம்மதியாய் வெளியே விட்டு
ஆழ்ந்த தூக்கம் போட
அலையாய் அலைகின்றது மனம்

அதிகாலையிலேயே எழுந்து
அரக்க பரக்க தயாராகி
அங்கொரு வேலை இங்கொரு வேலையென்று
ஆவி உருக்கி வேலைசெய்து

பாதி சம்பளம் வரியாய்க்கட்டி
மீதி அதைப் பாதி பாதியாக்கி
சாதிசனமென்று தூக்கி ஊருக்குப்பாதி...
மீதியாய் கால் சம்பளம் கையில்

கையில் இருப்பதில் காருக்கும்,
காப்புருதிக்கும், கடனாய் வாங்கிய வீட்டுக்கும்,
கணக்கில்லாமல் பெருகிய கழகங்கள் சங்கங்களுக்கும்,
கடனட்டைக்கும் கட்டியது போக கடனே கையில் மிஞ்சுது.

கடனை கஷ்டத்தை நினைத்தபடி
கண்விழித்துதிருந்து காலைப்பொழுதில் கண்மூட
கலர்கலராய் கனவு வருமென்றால்
கதிகலங்க வைத்தபடி வருகுது கனவுகளும்

காது செவிடுபடும்படி வெடிகுண்டோசைகளும்,
கலகலத்து விழுந்தழியும் கட்டிடங்களும்,
கனதியான கால்சப்பாத்துகளும் கைதுகளும்,
கண்ணீரோடு காணமல் போனோரைத்தேடும் உறவுகளும்...

இளைஞராய் இயற்கையை வென்று
இலட்சியமாய் கனவு காண முடியாமல்
இயல்பான நித்திரை இழந்து
இற்றுப்போய் நொந்துபோய் வாழும் சாதாரண பிறவிகளாய்...

இலட்சியத்தின் நெருப்பு இன்னும் இருக்குது
இனிதாய் நிறு பூத்து... நிமிர்ந்தெழும்...
இன்றில்லாவிட்டாலும் வென்றிடும் தமிழ் அன்று
இயல்பாய் எங்கள் இனிய கனவுகளும் விழிக்கும் ஈழத்தில்.

வல்வையூரான்.

புதன், 23 ஜூலை, 2014

கனக்கின்ற இதயங்கள்


இந்த நாள்...
ஏதோ ஒருவகை
ஏகாந்தம் கவ்விக்கொள்கின்றது
உயிரைத் தின்ற
குருதியின் நொடி

நாசியில் வட்டமிடுகின்றது
காரில் தட்டிய
வானொலியின் பாடலும்
காதில் "ஓ" என்ற
ஓலமாய் படுகின்றது
வீட்டில் ஓடவிட்ட
தொலைக்காட்சியில்
போகும் காட்சிகளையும்
கோரமாய் பிணக்குவியலாய்
காண்கிறது மனது

ஒவ்வொரு வருடமும்
இந்த நாள்
இந்த வாரம்
இந்த மாதம்
வந்து போகையில்
ஒரேவகை உணர்வுகள்
உயிர் குடித்த உணர்வுகள்
உருக்குலைந்த பிம்பங்கள்...

ஓலத்தின் வாசலாய்
சாதலின் தரிசனமாய்
ஞாலத்தின் நிதர்சனமாய்
கனக்கின்ற இதயங்களாய்
காகிதத்தில் கவிவரிகளாய்...

வல்வையூரான்.