செவ்வாய், 29 ஜூலை, 2014

நீ மீளும் நாளேது


காலம் காத்தால
கிழக்கு வெளிக்க முதல்
கருக்கலில் விளக்கெடுத்து
காடுபோய் வந்து


முறிச்ச வேலங்குச்சி கொண்டு
முழுதாய் பல்லுவிளக்கி
முகச்சவரமும் தான் செய்து
முகமலம்பி நீ வர

மூடி வச்ச பானையிலிருந்த
பழஞ்சோறெடுத்து பக்குவமாய்
தயிரும்விட்டு குழைத்து
தனித்த வெங்காயம் கடிக்க வைத்து

கட்டுசோறாய் கலயத்திலிட்டு
கருவாடும் சுட்டதில் வைத்து
கட்டடங்கா ஆசையோடு
காதல் மனைவி நான் உன் கையில் தர

கட்டி நீ எனைப்பிடித்து
கன்னத்தில் உந்தன்
கருத்த அதரம் பதித்து
கைகள் கரும் கூந்தல் தழுவி விட்டகன்றாய்

விடியலில் போனவன் கடிதாய் வேலைமுடித்து
விருப்பமாய் மாலைவந்தனைவான் என்றே
மல்லிகை பூவெடுத்து மாலையாய் தொடுத்து
மன்னவனிவன் வருகைக்காய் காத்திருக்கேன்

மாலையும் ஆகி எங்கும் கருத்தும்
ஆலையும் எல்லாம் பூட்டியும்
சாலையும் எல்லாம் வெறித்துப் போயும்
சேலையில் நான் சோலை ஓரம் காத்திருக்கேன்

காதலிக்கையில் காத்திருந்தாய்
கைப்பிடித்தவுடனும் காத்திருந்தாய்
காலங்களானதால் காத்திருக்க வைத்துவிட்டாய்
கண்டவர் கூட்டுனக்கு காதலியை மறந்து போனாய்

கட்டி வச்ச மல்லிகையும்
கண்டாங்கி சேலையும் கசங்க வேணும்
காலில் இட்ட கொலுசு கலகலக்க
கரும்கூந்தல் கலைய வேணும்

பகலவனும் மறைத்து போனான்
பக்கத்து வீட்டவரும் கதவடைத்து போனார்
பகலெல்லாம் தனித்திருந்தேன்
பாசத்தில் துடித்திருக்கேன்

பாவியானாய், பரிதவிக்க விட்டாய்
பாழும் குடி பழகிக்கொண்டாய்
பாச மனைவி எனைத்தான் மறந்தாய்
பணமனைத்தையும் தான் முடித்தழித்தாய்

கண்ணாளா காதலனே
கைப்பிடித்த மன்னவனே
காலையில் விட்டகலும் நேசத்தோடு
மாலையில் நீ மீளும் நாளேது சொல்வாய்?

வல்வையூரான்

Post Comment

3 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

 2. வணக்கம்!

  குடிக்காமல் வா..மச்சான்! கொஞ்சும் பருவம்
  படிக்காமல் ஆகுதே பாழ்!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  அண்ணா.
  கவிதையின் வரிகள் மனதை விட்டு அகலவில்லை மிகஅருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.