ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

என் மங்கை


நதியின் ஓடம் போல - சீராய்
நமது காதல் பறக்கும்.
மதியின் முகத்தாள் கூட - மனது
மகிழ்வாய் கலந்து பிறக்கும்.

உண்ணுகின்ற உணவு கூட - எந்தன் 
உடலில் சேரா திருக்கும்.
பண்ணுகின்ற வேலை எல்லாம் - மனப் 
பதிவில் ஏறா திருக்கும்.

மனதும் மனதும் சேர்ந்தால் - அங்கு
மந்திரக் காதல் பிறக்கும்.
உனது எனது எனும் - இந்த
உருப்பட பேத மிறக்கும்.

எந்நேரமும் உந்தன் பெயர் - காதில்
எக்காளமாய் ஒலித் திருக்கும்.
கண்ணோரம் வழிந்த கூந்தல் - என்
கருத்தில் நிலைத் திருக்கும்.

பின்னிய கூந்தல் நுனி - உன்
பின்னழகைத் தொட்டிருக்கும்.
உன்னிரு காதுத்தோட் டழகு - என்னை
உலுக்கியே எடுத் திருக்கும்.

வெண் நீண் நுதலில் - அங்கே
வெளிச்சமாய் பொட் டிருக்கும்.
கண் ணதில் பார்த்தால் - அங்கு
கயல் மீன்தா னிருக்கும்.

கன்னங்களில் கூர்ந்து பார்த்தால் - அங்கே
கஷ்மீர் அப்பிள்தா னிருக்கும்.
முன்னம் அழகு பார்த்தால் - அதில் 
முழுதாய் மலையிரண் டிருக்கும்.

பற்கள் என்று சொன்னால் - அதில்
பதித்த முத்துக்கள்தா னிருக்கும்.
சொற்கட்டு சொல்லக் கேட்டல் - காது
சொக்கிடும்குயி லோசைதா னிருக்கும்.

என்னவளை பாடயில் எனக்கு - இன்னமும்
எதமில்லாப் புத்துணர்வு பிறக்கும்.
கண்ணவளைக் காணா திருந்தால் - எந்தன் 
கண்ணோரம் நீர்வழிந் திருக்கும்.

கண்டால் கவலை மறைந்து - மீண்டும்
காதல் பொங்கி யிருக்கும்.
விண்கற்கள் கூடேமைக் கண்டு - வெட்கி
விரைந்தே ஒழித் திருக்கும்.

செய்த நற்சேட்டை எல்லாம் - மனதில் 
செதுக்கிய சிற்பமா யிருக்கும்.
கொய்த நல்பூ வெல்லாம் - மங்கை
கொண்டையில் கொலு விருக்கும்.

நண்பனிடம் வாங்கியமயி லிறகு - அங்கே
நளினமாய் அவள்கைசேர்ந் திருக்கும்.
பண்களில் வரும்பேரெ ல்லாம் - எனக்கு 
பாவையின் பெயர்போ லிருக்கும். 

வல்வையூரான்

Post Comment

3 கருத்துகள்:

  1. ஒவ்வொருவருக்கும் தம் மங்கையை நினைவுக்கு கொண்டுவரும் பதிவு என்மங்கை. மயக்கிய மங்கையை மடக்கிட்டிங்க தானே .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. இது வாழ்த்தா இல்லை காலை வாரலா விளங்கேல்ல. ஹி ஹி ஹி...

      நீக்கு
  2. எனக்கு இதைப் பார்த்துவிட்டு என்ன சொல்றதுன்னே தெரியல்ல... அவ்ளோ அழகா சொல்லியிருக்கீங்க அனைத்தையும்...!

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.