ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

பட்டினி



ஒற்றையடிப் பாதை
கன்னங் கரிய இருட்டு
சில் வண்டின் ரீங்காரம்
உடலை சிலிர்க்க வைக்கும் குளிர்
தூரத்தில் கோட்டானின் கதறல்
பக்கத்தில் இருந்த பதிந்த 
மரக்கிளையில் தொங்கி
விழிகளை உருட்டிய வௌவால்
எதிரே தெரிந்த நிமிர்ந்த மரம் தந்த
ஏகாந்தப் பேயை ஏற்றிடும் தோற்றம்
எதையும் இவன்
இலட்சியம் செய்யவில்லை
இலட்சியம் எல்லாம்
எதிரே தூரத்தில்
ஏதிலியாய் நின்ற ஒற்றைக் குடிசை.

இன்றோ நாளையோ இடிந்து விழுவேன்
என்றே சொல்லிய குடிசை மண் மதில்
அந்த சுவரில் ஊதுபத்தி சூட்டில்
எரிந்தும் எரியாததுமான மங்கலான
கலண்டர் முருகன் படம்
விடிந்தால் சூரியன்
விழுந்தடித்து உள்ளே வரும்
வித்தியாசமான ஓலைக் கூரை
மூலையில் கிடந்த
முழுசாய் கிழிந்த ஓலைப் பாயில்
முழங்கால் முகத்துக்கு நேரே நீட்டி
முழுவட்டமாய் முடங்கியிருந்தாள்
முத்து‘லட்சுமி எனும் முதியபாட்டி.

திறந்து கிடந்தது பலகைக் கதவு
பூட்டப்படாமல் இல்லை
பூட்டே இல்லாமல்
உள்ளே இருள் கவிந்து கிடந்தது
ஏற்றப்பட்ட குப்பி விளக்கு
எண்ணை இல்லாது போனதால்
காற்றில் அது கலந்திருந்தது
கருகிய திரி புகையை
அடுப்பில் படுத்திருந்த கருப்பு பூனை
ஆ... என கொட்டாவி விட்டு
மீண்டும் சோம்பலோடு
சாம்பலுக்குள் முடங்கிக் கொண்டது
இரண்டு கப்புகளுக் கிடையில்
கட்டியிருந்த கொடிக்கயிறு
இற்றுப் போனதால்
படாரென அறுந்துபோனது
பரவிக் கிடந்தன பழைய
கிழிந்த புடவைகளும் சாரங்களும்.

அவனுக்குள்ளும் பசிதான்
ஆனாலும் அவன் முன்
அவன் ஆசைப் பாட்டி
ஆச்சுது இன்று மூன்றாம் நாள்
பட்டினியைப் பலமுறை
பார்த்தவர்கள் இவர்கள்
பழகிப் போனது தான் என்றாலும்
பசிக்கிறது என்செய்ய
கொஞ்சம் படிச்சவர் தான் இவர்
கெஞ்சிக் கேட்டும் இவனுக்கு
வேலை ஏனோ கிடைக்கவில்லை
மாரி பொய்த்ததால்
வயலும் இல்லை வாழ்வும் இல்லை
கூலி வேலைக்கு போகலாம் என்றால்
குடிசைகளின் நடுவில் கூலி ஏது
பசிக்குது என்று கையேந்த
பாவி மனம் ஒப்பவில்லை
வசிக்கின்ற வீடும் திருத்தி
வளமாக்க வேண்டும்
புசிக்க நல்லதாய் இருவர்க்கும்
போசனம் வேண்டும்
பாட்டிக்கு ஒரு நல்ல சேலை
வீட்டிற்கு ஒரு நல்ல கூரை
கேட்டது ஒரு வேலை அது இல்லை
போட்டதும் ஒரு வேசமில்லை

ஏழு நாளுக்கு பிறகு
ஏழு காத தூரம் போய்
கிடைச்சது ஒரு கூலி
மூன்று நாலு நாள
பாட்டியும் இவனும் பட்டினி
வாங்கினது இரண்டு ரொட்டி
பசிக்கு இதுதான் கெட்டி.

பாட்டி... பாட்டி... நான்
‘செல்வநாதன் வந்திட்டன்
எழும்பன ரொட்டியிருக்கு
முத்து லட்சுமி பாட்டி இருந்த மூலைக்கு
முழு எட்டில் போய் நின்றான்
ஆசைப்பேரன் பாட்டியை
அணைத்து தூக்கி எடுக்க எண்ணி
குந்தி இருந்து கையை நீட்டி
பாட்டியின் தலையைத் தூக்க
தொங்கியது தலை
சில்லிட்ட உடலின்
சிரத்தை விடுத்து
கரத்தைத் தூக்கி
மணிக்கட்டை அவசரமாய்  
அழுத்திப் பார்த்தான்
ஆவி போய் இருந்தது.

அய்யோ பாட்டீ...
அலறி அழுதான்
தலை சுற்றியது
பசியால் இல்லை பாட்டி பிரிவால்
எதிரே அடுப்பில்
கரிய பூனையும்
கழுத்தை தொங்கப் போட்டிருந்தது
பாட்டி பிரிவால் இல்லை
பசியால் அதனாவியும் பிரிந்திருந்ததால்.


 வல்வையூரான்.

Post Comment

11 கருத்துகள்:

  1. அண்ணா இந்த கவிதையை படிக்கும் போது உண்மையாகவே எனக்கு கண்கள் கலங்கி விட்டது : பட்டினியை நீங்கள் எவ்வளவு யதார்த்தமாக உணர்ச்சி பூர்வமாக எழுத்து வடிவில் கூறியிருக்கிறீர்கள் உண்மையில் நீங்கள் மென்மேலும்
    வளர்ச்சியடைய என்னுடைய வாழ்த்துக்கள் முகுந்தன் அண்ணா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் சகோதரி உங்கள் வருகைக்கும் கருத்திடுகைக்கும். தொடர்ந்தும் என் பக்கத்துக்கான உங்கள் ஆதரவை எதிர் பார்க்கின்றேன்.

      நீக்கு
  2. பசியும் பாட்டியும் நெஞ்சை நெருடும் கவிதை சகோ தொடருங்கள் இன்னும் கவிதைகளுடன் .வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நேசமான நெஞ்சமே. நீங்கள் இந்த பக்கத்துக்கு வந்தமைய இட்டு பெருமிதம் கொள்வதுடன் உங்களை வருக வருக என வரவேற்கிறேன். உங்கள் நெஞ்சே நெருடும் கவியாக என் கவி இருந்தமை மகிழ்ச்சியே. நன்றிகள் அண்ணா தொடர்ந்தும் வாருங்கள் கருத்திடுங்கள்.

      நீக்கு
  3. நினைவுகளில் ஒவ்வொன்றும் வலம் வருகிறது வாசிக்கையில்.
    வறுமையின் கொடுமையை எளிமையாக உள்வாங்க முடிகிறது
    வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பா. உங்கள் வரிகளுக்கு முன்னாள் நாங்கள் சாதாரணம்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரர் முகுந்தன்,,
    மனம் அப்படியே மலைத்துப்போய் நின்றுவிட்டது..
    பட்டினியின் அகல நீளங்களை அங்குல அங்குலமாக
    கவியாக்கிவிட்டீர்கள்...
    பசியறிந்த புசிக்கும்
    பசியில்லாப் புசிக்கும்
    புசி தேடும் பசிக்கும்
    ஆயிரமாயிரம் வித்தியாசங்கள் உண்டு...

    "வயலும் இல்லை வாழ்த்தும் இல்லை
    கூலி வேலைக்கு போகலாம் என்றால்
    குடிசைகளின் நடுவில் கூலி ஏது
    பசிக்குது என்று கையேந்த
    பாவி மனம் ஒப்பவில்லை..."

    பசியிருந்தும் கையேந்த மனமில்லா...
    பசியடக்கும் புசியினை இங்கே
    கண்டு மனம் புளுங்கித்தான் போனேன்...
    அருமையான படைப்பு..
    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வசந்த மண்டப காற்று இங்கும் விசியது பெருமையே. மழை கண்ட மயிலானேன். அன்புக்கு நன்றிகள் அண்ணா. தொடர்ந்தும் உங்கள் காற்றுக்காக காத்திருக்கின்றேன்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரம்,
    நலமா?
    இன்பமும் துன்பமும் வாழ்வில் இரண்டறக் கலந்த விடயங்கள் தான், ஆனால் இக் கவியில் ஓர் பாட்டியின் அந்திமக் காலம் கூட பட்டினியால் அல்லாடும் வண்ணம் இருந்திருக்கிறது என்பதனை சொல்லியிருக்கிறீர்கள்.
    கவியில் வரும் உவமான உவமேயங்கள், சொல்லாடல்கள் எல்லாம் இடப் பெயர்வின் போது ஓலைக் குடிசைதனுள் உயிர் துறந்த பல பாட்டிகளின் வாழ்வியலைச் சொல்வது போல் தோன்றுகிறது!

    ஒரு பொருள் கவியில் வெளித் தெரிகிறது.
    மறு பொருள் கவியின் உள்ளே மறைந்து உள்ளார்ந்து நிற்கிறது.
    அருமையான படைப்பு.
    கொஞ்சம் சுருக்கி எழுதி நறுக்கென்று இருக்கும் வண்ணம் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக உங்கள் கருத்தை அடுத்த படைப்புகளில் கருத்தில் எடுக்கின்றேன் தம்பி. தொடர்ந்தும் வாருங்கள்.

      நீக்கு
  6. சும்மா ஒரு சுத்து சுத்தி இருக்கீஙகள்.

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.