ஞாயிறு, 13 ஜனவரி, 2013

பொங்கலோ பொங்கல்...


நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...

கல்லு மூண்டு வச்ச அடுப்பில
கனதியான புது மண் பானை வச்சு
முக்குறிகளை  முழுசா அதற்கு வச்சு
பக்கத்தில கட்டோட கரும்பு வச்சு

புது நெல்லு மணி விளக்கி
பசும்பாலும் நெய்யும் மனமா விட்டு
பக்குவமா சக்கரை கலந்து
பதமாக வெந்து வர
முந்திரி வத்தலும் முந்திரிப்பருப்பும்
ஏலத்தூளும் தூவி
பொங்கல் பொங்கி வர
வெடி சுட்டு
பொங்கலோ பொங்கல் எண்டு
பாட்டி குலவையிட
பக்கத்துக்கு வீட்டிலும்
முன் வீட்டிலும் கூட
வெடியோசை வானைப் பிளத்தது
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...

இது
முன்பொரு காலம்.


ஆனால் இப்ப

முன் வீட்டு குடும்பம் இன்னும்
முகாம்ல இருந்து வரயில்ல
முள்ளு கம்பிக்குள்ள
முழுசா அடைபட்டு இருக்கினம்

ஆனாலும் எங்களுக்கென்ன
நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...

பக்கத்துக்கு விட்டில இருந்த
பரமசிவத்தார்ட பெடியன்
வன்னில இருந்து வரயிக்கை
வழியில காணாமல் போனவன்
இன்னும் வீடு வரயில்ல


ஆனாலும் எங்களுக்கென்ன
நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...


விதானையார் வினாசித்தம்பி வீட்டில
ரெண்டு நாள் முன்னால
விறுக்கேண்டு வந்த
வெள்ளை வானால வில்லங்கம் ...
விதானையார்ட மனிசி அழுதா...


ஆனாலும் எங்களுக்கென்ன
நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...

தெரு முனையில
இருக்கிற சின்னையா விட்டில
படிக்க எண்டு
பல்கலைக்கழகம் போன
பரந்தாமன் திரும்பி வார வழியில
படக்கெண்டு மறிச்சவங்கள்...
பிடிச்சு போனவங்கள்...
இன்னும் விடயில்ல


ஆனாலும் எங்களுக்கென்ன
நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...

இப்படி தினமும் 
எத்தனையோ நடக்குது
இங்கேயும் அங்கேயும் நடக்குது
இரவும் பகலும் நடக்குது  

ஆனாலும் எங்களுக்கென்ன
நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...

வல்வையூரான்.

Post Comment

9 கருத்துகள்:

 1. பொங்கல் கவிதை நல்லா இருக்குது சகோதரரே...


  வீரிய விதை எடுத்து
  வீதி எல்லாம் விதைத்திடுவோம்...
  விதையினின்று புறப்படும்
  விருட்சத்தின் கிளைகளில்
  வீடொன்று கட்டிடுவோம்
  இனியும்
  வீழாதிருக்க
  வாழ்வாங்கு வாழ்ந்திடும்
  வான்புகழ் வெய்யோனை
  வாயார புகழ்ந்திடுவோம்....

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்
  நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா. புதிய ஆண்டில் புது நாளில் முதல் வருகை உங்களது.
   உங்களுக்கும் அண்ணிக்கும் பிள்ளைகளுக்கும் மற்றுமுள்ளோருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

   நீக்கு
 2. பொங்குவம் நாங்களும் பொங்குவம்....அன்பு வாழ்த்துகள் முகுந்தன் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கோ அக்கா நீண்ட நாளின் பின். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

   நீக்கு
 3. எங்களுக்கென்ன பொங்குவோம் .............. ஒருநாளும் பொங்கமாட்டம்
  வாழ்த்துக்கள் நிலைசுட்டும் கவிதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தம்பி. தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

   நீக்கு
 4. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
  அன்புடன்
  நாடிகவிதைகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். தொடர்ந்தும் வாருங்கள்.

   நீக்கு
  2. இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். தொடர்ந்தும் வாருங்கள்.

   நீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.