வியாழன், 12 மார்ச், 2015

தாழ்ந்து நிற்கும் தரணி


வேரில் வைத்திருந்த உயிர்ப்பை
வேள்வி முடித்து நிமிர்ந்த முனிபோல்
வெய்யில் கண்டதும் வேகமாக
வெளித்தள்ளி முளைத்தன தளிர்கள்

அத்தனையும் சுள்ளிகளாய் மட்டுமாகி
அனைத்தையும் உதிர்த்துக் கொட்டி
பொட்டிழந்த விதவையாகி நின்றவை
சிங்காரித்து சிரித்தன பருவப் பெண்ணாய்

நிலம் பிளந்து
நீர் மதர்ப்பு உறிஞ்சி
மலர் முகம் காட்டின
மகிழ்வாய் சூரியனுக்கு

சோதனையும் சோகமும் கொண்டு
ஓரோரிலையாய் உதிர்த்து
சோபையை இழந்து
சோகத்தில் இருந்தவை துளிர்க்கின்றன

கடும்பனி குளிரை
கணக்கில் எடுக்காது
அதனுள் அமிழ்ந்தவை
கர்வத்தோடு முழிக்கின்றன

வசந்தகாலம் வந்தது
வளங்கள் தந்தது
வாசலுக்கு வருகின்றன மலர்கள்
வசந்தத்தின் வாசனை தரவே

ஆண்டுக்கொரு முறை
அழுது தன்னை இழந்தாலும்
மீண்டு சிரிக்கின்றன
வித்தக தன்மை கொண்ட மரங்கள்

வீழ்ந்தவர் நாங்கள்
விலைகள் பல கொடுத்தவர் நாங்கள்
வாழ்ந்தவர் நாங்கள் மாண்டு
மகிழ்வதை நிரந்தரமாகத் தொலைப்பதா

மனம் மக்கி இருக்காதே தமிழா
வசந்தகாலம் உனக்கும் கூட உண்டு
வேதனைகளை முட்டித்தள்ளி எறிந்து எழு
தாழ்ந்து நிற்கும் தரணி உனக்குக் கீழ்...

வல்வையூரான்.

Post Comment

2 கருத்துகள்:

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அண்ணா
    செப்பிய வரிகள் கண்டு சிந்தை தளர்ந்தது........உண்மைதான்
    அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.