ஞாயிறு, 20 மே, 2012

மௌனம் பேசியது.



மெதுவாக கண்களைத் திறக்க முயற்சி செய்தாள் அமுதா. தலை விண் விண் என வலித்தது. காலில் வேறு பாரமாக உணர்ந்தாள். 'அட அது .... அம்மாவா?...' நீராவி படிந்த கண்ணாடியூடு பார்ப்பது போல் பார்வை தெளிவற்றிருந்தது.

இரண்டு மூன்று முறை கண்களை மூடித் திறந்தாள் அமுதா. இப்போது பார்வை சற்று தெளிவாக இருந்தது. வலியும் அதிகமாக தெரிந்தது.

" அம்... மா... "

வேதனையில் முனகினாள் அமுதா.

" பிள்ள நான் நிக்கிறன் நீ படு... "

ஆறுதலாக தடவினாள் லலிதா, அமுதாவின் தாய். மெதுவாக மீண்டும் கண்களை மூடினாள் அமுதா. அவள் நினைவுகள் எங்கோ பறந்தது. வலி தெரியாமல் இருக்க அந்த நினைவுகளில் மனதை வலிந்து புகுத்தினாள் அமுதா.
கனகசபை லலிதராணி தம்பதியினருக்கு இரு பிள்ளைகள். ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று. மூத்தவன் கமலசபேசன் இளையவள் அமுதராணி. தங்கள் பெயர்களின் பகுதிகளை பிள்ளைகளின் பெயர்களில் ஒட்டவைத்து பெயர் சூட்டி இருந்தார் கனகர். பிள்ளைகள் இருவரும் பெற்றவர்களைப் போலவே அழகு. அதிலும் அமுதா மிக மிக அழகானவள்.

கமலன் தன் பதினெட்டு வயதில் தன்னை நாட்டுக்காக தந்திருந்தான். இப்போது அமுதாவுக்கு இருபத்து மூன்று வயது. தமயனின் பிரிவு சிறுது காலம் அலைக்கழித்தாலும் காலச் சுழட்சி அவளைப் புடம் போட்டு வாழ்வைப் புரிய வைத்திருந்தது. நிலையற்ற இந்த உலகில் யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பதை உணரும் வயது அவளது.

அவளது வயது அவளுக்கு ஒரு துணையைத் தேடி இருந்தது. அவன் தான் கிருபா.

கிருபா அவள் ஊருக்கு இரண்டு ஊர் தள்ளி உள்ள ஊரில் இருப்பவன். அவனும் நல்ல அழகன். கிருபா ஊரில் தான் தனியார் கல்வி நிலையம் இருந்தது. அதற்குதான் அமுதா படிப்பதற்கு சென்று வந்தாள். கல்வி நிலையம் சென்று வரும்போது கிருபாவைக் கண்டிருக்கிறாள் அமுதா. கிருபாவின் கண்களின் காந்தக் கவர்ச்சியில் மயங்கி அவனை திரும்பி பார்ப்பாள் அமுதா. அதேபோல் அமுதாவின் கன்னத்தில் குழி விழுந்த சிரிப்பும் மற்ற மாணவிகள் மத்தியில் கல கலவென பேசித் சிரித்தபடி சைக்கிள் ஓட்டும் லாவகமும் கிருபாவையும் கவர்ந்திருந்தன. இருவரின் அழகுக் கவர்ச்சி ஒருவருக்கொருவரைப் பிடித்திருந்தாலும் பேசிக் காதலை வெளிப்படுத்த இருவருக்குமே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆணால் ஒருவரை ஒருவர் பார்ப்பதை இருவரும் நிறுத்தவில்லை.

அதற்க்கான காலம் மிக விரைவிலேயே கனிந்து வந்தது. யாழ் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தில் கண்காட்சிக்கு அறிவிப்பு வந்தது. கிருபா அவன் தோழர்களோடு கண்காட்சிக்கு சென்றான். ஒவ்வொரு பகுதியாக பார்த்து வந்தவன் மனித உடற்கூறுகள் வைக்கப்பட்ட பகுதிக்கு வந்து சேர்ந்தான். அப்பகுதி வாசலுக்கு வந்த கிருபாவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதன் வாசலில் அமுத தனியாக நின்றிருந்தாள். ஆச்சரியம் மிகுந்தவனாக சுற்றுமுற்றும் தேடினான் கிருபா அமுதாவின் தோழியரை. யாரையும் காணதவனாக மானின் மிரட்சியுடன் குறுகுறுக்கும் கண்களால் மெதுவாக இவனை ஓரப் பார்வை பாத்தபடி நின்ற அமுதாவிடம் திரும்பி

" என்ன தனிய நிக்குறீங்கள்? எங்க உங்கட பிரண்ட்ஸ் ஒருத்தரையும் காணேல்ல..."

என்றான்.

" இ... இல்.... இல்ல எல்லாரும் உள்ள போட்டினம். நான் போகேல்ல.."

" ஏன்? "

" உள்ள பொடி எல்லாம் வைச்சிருக்காம். அதான்..."

" ஏன் என்ன பயமோ?.."

என நகைத்தான் கிருபா. பின் தன் நண்பர்கள் பக்கம் திரும்பி

" டேய் நீங்க போங்கோ நான் பின்னால வாரன்.."

என்றான் பொருள் பொதிந்த சிரிப்பொன்றை உதிர்த்தபடி.

" OK டா மச்சான் "

என்றபடி உள்ளே சென்றனர் அவன் நண்பர்கள் அவன் சிரிப்பின் அர்த்தம் புரிந்தவர்களாக. நண்பர்கள் உள்ளே சென்றபின் அமுதாவிடம் திரும்பிய கிருபா

" என்ன பதில காணேல்ல? "

" ஏன் என்ன கேட்டியல்?"

"ஏன் பொடி இருந்த என்ன பயமோ எண்டனான்..."

" அப்ப நீங்களும் போகேல்லையே ... உங்களுக்கும் பயமோ?.."

" இல்ல வேண்டின ஆக்கள் தனிய நிக்கேக்க கைவிட்டுட்டு போகக்கூடாது அதுதான்...."

" ஆர் வேண்டின ஆக்கள்?... ஆருக்கு..?"

"அது அந்த வேண்டப்படவைக்கு தெரியும் தானே..."

என்றபடி சிரிக்க ஆரம்பித்தான் கிருபா. அவன் சிரிப்பில் தானும் கலந்தால் அமுதா.

" அது சரி பிரண்ட்ஸ் எல்லாம் விட்டாச்சு. பிறகு எப்படி அவையளோட சேருவியள் "

கேட்டான் உண்மையான அக்கறையுடன் கிருபா.

" ஏன் உள்ள போனவையள் இதால தானே திரும்பி வருவினம்?.... "

என புருவத்தை உயர்த்தி வியப்போடு கேட்டால் அமுதா.

" ஐயோ... இவ்வளவு நேரம் நிக்கிறியளே... ஆராவது இதால வந்தவையலோ?.... "

கேட்டு நிறுத்தினான் கிருபா. அப்போது தான் அமுதாவுக்கு உரைத்தது, இதுவரை உள்ளே போன எவரும் இந்த வாசலால் வரவில்லை என்பது. ' கடவுளே அவள்களை விட்ட நான் தனிய இப்ப எங்க போய் தேடுவன் ' என நினைத்தபடி கிருபாவிடம் திரும்பி

" அப்ப அவையள் எல்லாம் வேற வழியால தானோ வெளியால வருவினம்? "

" ஓம் நீங்க என்னோட வாங்கோ நான் உங்களை உள்ள கூட்டிக்கொண்டு போய் அவையோட சேர்த்து விடுறன்."

என்றான்.

" சரி கெதியா வாங்கோ.."

என்று அவனை அழைத்தபடி உள்ளே செல்லத் தயாரானாள் அமுதா. ' காதலன் அருகிருந்தால் கன்னியருக்கு எப்படித்தான் இவ்வளவு தைரியம் வருகிறதோ...' என வியந்தபடி அவள் கூட உள்ளே நுழைந்தான் கிருபா.

இப்போதெல்லாம் அமுதா வகுப்புகள் முடிந்து அனைவரும் வெளியேறிய பின்னரே தனியாக சைக்கிளைத் தள்ளியபடி வெளியே வருகிறாள். வெளியே வந்ததும் அவள் கண்கள் கிருபாவைத் தேடும். அவளது சைக்கிள் வருவது கண்டதுமே தயாராவான் கிருபா. இருவரும் ஒன்றாக அமுதா ஊர் எல்லை வரை மிக மெதுவாக சைக்கிளை மிதித்தபடி வருவார்கள் தங்களுக்குள் சிரித்து பேசியபடி. பின்னர் கிருபா தன் ஊருக்கு திரும்பி விடுவான். இவ்வாறே இவர்கள் சந்திப்பு தொடர்ந்தது.

அமுதாவின் படிப்புகள் முடிந்ததும் கிருபா அமுதா ஊருக்குள் வந்தே அவனை சந்திக்க வேண்டி இருந்தது. அமுதாவும் கோயிலிக்கு போவதாக சொல்லியும் நண்பிகளை சந்திக்க செல்வதாக சொல்லியும் வீட்டில் இருந்து புறப்பட்டு கிருபாவை சந்தித்தாள். காதலர்கள் சந்தித்தால் தான் நேரம் போவதே தெரியாதே. அடிக்கடி நேரம் பிந்தி வீடு திரும்பினாள் அமுதா.

ஒரு நாள் கோவிலடியில் கிருபாவை சந்தித்து பேசிக்கொண்டிருக்கும் போது அமுதாவின் தோழியின் அப்பா அமுதாவை பார்த்து கனகரிடம் விடயத்தை சொன்னார்.

வீட்டில் வெடித்தது பூகம்பம். என்னதான் காலம் வளர்ந்து சென்றிருந்தாலும் காதல் என்றவுடன் பெற்றவர்கள் பொதுவாகவே அதை எதிர்ப்பது என்பது இன்னமும் எம்மிடையே இருக்கத்தான் செய்கிறது. அதிலும் வேதனையான விடயம் என்னவென்றால் தாங்கள் காதலித்து மணந்திருந்தாலும் கூட தங்கள் குழந்தைகள் காதலிகின்றார்கள் என்றவுடன் அதை எதிர்ப்பது என்பது தான். அமுதாவின் பெற்றோர் என்ன விதி விலக்கா?

சேதி அறிந்ததும் கனகர் வீடு வந்து லலிதாவுடன் பாய்ந்தார்.

" என்ன பிள்ளை பெத்திருகிரா? அங்க தெருவில நிண்டு ஆரோடையோ கதைச்சு கொண்டு நிக்கிறாளாம்... "

பலமாக வெடித்தார்.

" என்னப்பா சொல்லுறியள்?... ஆர்?... அமுதாவோ?... நீங்க வேற ஆரையும் பத்திருபியள். எங்கட பெட்டை அப்படி செய்ய மாட்டாள். கோயில் குளம் எண்டு திரியிறவள பத்தி சும்மா கதைக்கதைங்கோ... ஓ... சொல்லிபோட்டன்... "

பதிலுக்கு வெடித்தால் லலிதா. கனகர் விடயத்தை விளக்கியதும் ஆடிப்போனாள் லலிதா.

ஏதும் அறியாமல் வீடு திரும்பிய அமுதாவை தாயும் தந்தையும் சேர்ந்து திட்டி தீர்த்தனர். முதலில் திகைத்த அமுதா விடயம் புரிந்ததும் தான் காதலிப்பதையும் அவனையே திருமணம் செய்ய இருப்பதையும் தாய் தந்தையிடம் தெரிவித்தாள். அவளது முடிவைக் கேட்ட கனகர் அவளை வீட்ட விட்டு வெளியேற விடாது தடுத்ததுடன் அவளுக்கு அவசரம் அவசரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார். அவள் எங்கு சென்றாலும் தானே அவளைக் கூட்டி சென்று வந்தார்.

இவற்றோடு மட்டும் கனகர் நிறுத்தி விடவில்லை. அமுதாவின் காதல் பிரச்சனை அறிந்த மறுநாளே கிருபாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு கிருபாவையும் அவன் தாய் தந்தையையும் வாய்க்கு வந்தபடி வசை பாடினார். கிருபா குடும்பத்தை அவமானப்படுத்துவதே அவர் நோக்கமாக இருந்தது. ஆனாலும் கிருபாவின் தந்தை ஓர் அமைதியான மனிதர். எனவே சண்டை பெரிதாகாமல் போனது, அதில் கூட கனகருக்கு சிறிது வருத்தம் தான்!

கிருபாவின் தந்தை கிருபாவிடம்

" தம்பி... அந்த மனிசன் ஒரு பண்பு கேட்ட ஆளா இருக்கார். நீ அவற்ற மகளை மறந்திடு... ஓம் அதான் உனக்கு நல்லது. அதோட உனக்கு நான் சிலாபதில ஒரு பெரிய றால் பாம் கொம்பனில ஒரு மனேஜர் வேலை பாத்திருகிறன். என்ட பிரண்ட் ஒராளால கிடைச்சது. நல்ல சலரி வேற. நீ அங்க போய் இரு தம்பி. அப்ப உனக்கு இது கொஞ்சம் கொஞ்சமா மறந்திடும்..."

என்றார்.

" அப்பா என்னை மனிச்சுடுங்கோ. என்னால அவளை மறக்க முடியாது. ஆனாலும் வேலைக்கு போறான். அதுக்காக அவளை மறந்துட்டன் எண்டு நினைச்சு எனக்கு இங்க பொம்பிளை தேடுறது... காலியாண அலுவல்கள் பாக்கிறது எண்டு ஏதும் வைச்சுகொள்ளதங்கோ..."

என்று கண்டிப்பாக கூறிவிட்டு சிலாபத்துக்கு சென்றான் வேலைக்காக.

நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகின. லீவுகளுக்கு வரும் கிருபா அமுதாவின் ஊர் பக்கம் தன் நண்பர்களை அனுப்பி உளவு பார்ப்பான். அமுதாவை எங்கும் தனியாக விடுவதாக இல்லை கனகர். சந்திக்க பேச எந்த வாய்ப்புகளும் இல்லை.



காதலில் பிரிவு தரும் வேதனைக்கு இந்த உலகில்... ஏன் எந்த உலகிலும் இணை இருக்க முடியாதே. வேதனைத் தீயில் வெந்து கருகினான் கிருபா. அமுதாவும் தான். காதலர்கள் சேர்ந்திருந்தால் யுகங்கள் கூட நொடிகளாகும். பிரிந்தால் நொடிகள் கூட யுகங்களாக தெரிகிறதே.

இரு வருடங்களின் பின் சித்திரை வருடப்பிறப்பு விடுமுறை. இரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினான் கிருபா. அவனை அழைத்து செல்ல பஸ் தரிப்பிடத்துக்கு அவன் நண்பர்கள் வந்திருந்தனர். பஸ் அவன் ஊரை நெருங்கிக் கொண்டிருந்தது. எதிரே.... ஆம் அமுதா அவள் அப்பாவுடன் மோட்டர் சைக்கிளில் வந்துகொண்டிருந்தாள். கிருபாவுக்கு சந்தோசம் தாங்கவில்லை. எவ்வளவு காலத்துக்கு பிறகு அவளை நேரே காண்கிறான். நெஞ்சுக்குள் பட்டம் புச்சிகள் கோடி கோடியாக சிறகடித்தன.

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நிகழ்வுகள் நடந்து முடிந்தன. எதிரே இருந்து வந்த ஒரு ஹையஸ் வான் கன வேகமாக வந்து கனகரின் மோட்டர் சைக்கிளோடு மோதி அவர்கள் இருவரையும் தூக்கி எரிந்தது. அதிர்ந்தான் கிருபா. வேக வேகமாக பஸ்ஸில் இருந்து இரங்கி ஓடினான்.

" அமுதா...அமுதா... "

கிருபாவின் குரலுக்கு பதில் இல்லை அமுதாவிடம் இருந்து.

" ஐயோ... அ... ம்... மா...."

ஈனசுரத்தில் முனகினார் கனகர். ஒரு கணம் ஸ்தம்பித்த கிருபா நண்பர்களுடன் கூடி எதிரே வந்த இன்னொரு வானை மறித்து இருவரையும் தூக்கி ஏற்றினான். அமுதாவின் தலையால் இரத்தம் கொட்டிகொண்டிருந்தது. வான் பறந்தது வைத்தியசாலைக்கு. வைத்தியசாலை சேர்ந்தபோது இருவரும் மயங்கி இருந்தனர். அவசர சிகிட்சை பிரிவில் இருவரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களைப் பரிசோதித்த வைத்தியர் வெளியே வந்து கிருபாவிடம்

" நீங்க ஆர் தம்பி? அவையளுக்கு சொந்தகாரரோ..? "

" இல்ல சொந்தம் அகப்போறவன். ஏன் சேர் என்ன ஆச்சு "

" ரெண்டு பேருக்கும் ரெத்தம் நிறைய போட்டுது... ஆனாலும் சரியான நேரத்தில கொண்டு வந்திருக்கீங்கள். அவர்ர குரூப் ரெத்தம் இருக்கு... ஆனா... அந்த பிள்ளைட ரெத்த குரூப் இங்க எங்களிட இப்ப கையில இல்லை. மத்த ஹோஸ்பிடளுக்கு கேட்டிருக்கன். ஆனா உடன ரெத்தம் வேணும்... கிடைச்சாத்தான் காப்பத முடியும்... ஆராவது ஓபோசிடிவ் ரெத்தம் உள்ளாக்கள் வேணும்..."

" நான்தாரன்... என்ட ரெத்தத்த செக் பண்ணுங்கோ சேர்.."

கிருபாவின் இரத்தமும் அமுதாவின் இரத்தமும் பொருந்தி வர ஒரு பைந் இரத்தம் இடம் மாறியது.

மூன்று நாட்களின் பின் இன்றுதான் அமுதா கண் முழித்திருந்தாள். மீண்டும் கண்களை மூடி நினைவுகளில் மிதக்க ஆரம்பித்த அமுதா அம்மா அவசர அவசரமாக எழுந்திருக்க முயற்சித்ததனால் உண்டான சத்தத்தினால் மீண்டும் முழித்தால் அமுதா. சிந்தனை கலைந்தது.

" வாங்கோ தம்பி... நீங்க ஏனப்பா எழும்பி வந்தியள்..."

அமுதாவுக்கு தான் காண்பது கனவா... நினைவா?.. நம்ப முடியாது இருந்தது. கிருபாவின் தோளில் தாங்கி பிடித்தபடி ஒரு காலில் பலத்த கட்டுடன் நின்றார் கனகர்.

" இல்லை லலிதா.... பிள்ளை மிழிச்சிட்டலோ எண்டு பாப்பம் எண்டுதான்..."

இழுத்தார் கனகர்.

அமுதாவின் கண்கள் குளமாகின. கிருபவினுடையதும் தான். கனகரை மெதுவாக லலிதாவிடம் விட்டு விட்டு அமுதாவின் கையை மெதுவாகப் பற்றி தன் கைக்குள் அடக்கி கொண்டு அவள் கண்களையே பார்த்தான் கிருபா. அங்கு மௌனம் பேசியது, ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள். வெளியே எங்கோ தூரத்தில் ஒரு ஐஸ்கிரீம் வானில் பாடல் ஒலித்தது.

' கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் ... காதல் என்று அர்த்தம்...'



வல்வையூரான்.









Post Comment

2 கருத்துகள்:

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.