வெள்ளி, 29 ஜூன், 2012

பள்ளிக்காதல்.சந்தானத்திற்கு சந்தோசத்தில் மனம் இருப்புக் கொள்ளாமல் தவித்தது. இருக்காதா என்னஅவன் பள்ளி தோழி தனம் என்னும் தனலட்சுமிக்கு மாலையிட உள்ள பொன்னான நாளல்லவா இன்று. இன்னும் சிறிது நேரத்தில் பெண்வீட்டார் மாப்பிள்ளை அழைக்க வந்து விடுவர். 

தனத்தை மடக்குவதற்கு அவன் எவ்வளவு கஷ்டப்பட்டான் என்பது அவனுக்கும் அந்த கடவுளுக்கும் தான் வெளிச்சம்.

சந்தானமும் தனமும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். தனம் சிறு வயது முதல் அதே பாடசாலையில் படித்து வருபவள். சந்தானம் ஒன்பதாம் ஆண்டு வரை திருகோணமலையில் படித்துவிட்டு தகப்பனுக்கு சிங்கள இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கவே அவனும் தாயும் தம்பியும் அவர்களது சொந்த ஊரான கிளிநொச்சிக்கு வந்து சேர்ந்தனர். பாடசாலை சேர்ந்த முதல் நாள் இன்றும் அவனுக்கு நினைவில் நின்றது. யாரையும் தெரியாத வகுப்பில் அவனுக்கு பக்கத்து வரிசையில் தனம் சிறு பொம்மை போல் அமர்ந்திருந்தது அவன் மனக்கண்ணில் நின்றது.

வந்த அன்றில் இருந்தே தனத்தின் மீது சந்தானத்திற்கு ஓர் இனம் புரியாத ஈர்ப்பு. நாளாக நாளாகத்தான் அவனுக்கு அது தெரிந்தது, அவன் அவளை காதலிப்பதாக. அவன் மட்டும் இல்லை, அவள் வகுப்பை விட கூடியவர்கள் கூட அவளை காதலிப்பதற்கு வரிசையில் நின்றார்கள். தனம் அந்த பாடசாலையின் தலை சிறந்த அழகி.

அவள் வகுப்பில் இருந்து வெளியே வந்தால் அவளை கண்டு வழிவதற்கு இருவராவது வாசலில் காத்திருப்பர். அவளுக்கு வரும் காதல் கடிதங்களும் எண்ணிவிட முடியாது. ஆனாலும் தனம் எதையும் லட்சியம் செய்ததாக இல்லை. தான் உண்டு, தன் படிப்புண்டு என இருந்தாள். தனம் சுமாராக படிக்ககூடியவள் தான்.

நாட்டு சுழல் அனைவரையும் இடம்பெயர வைத்தது. பலர் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றனர். கால சக்கர சுழற்சியிலே சந்தானம் லண்டன் போயிருந்தான். லண்டனில் அவன் மாமா கூட தங்கி இருந்தான். மாமா அவனை லண்டன் கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் சேர்த்து விட்டிருந்தார். சந்தானம் பட்டம் முடித்தான்.

வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்றவன் என்றாலே ஊரில் இருக்கும் மணமகன் சந்தையில், ஊரில் உள்ள படித்த மாப்பிள்ளைகளை விட அதிக மதிப்பாக பெண்ணைப் பெற்றவர் நினைக்கின்ற காலமிது. சந்தானம் லண்டனிலேயே உள்ள படித்த மாப்பிள்ளை. பெண் வீட்டார் படை எடுக்க ஆரம்பித்தனர். தனத்தின் பெற்றோர் மட்டும் என்ன விதி விலக்காஅவர்களும் தனத்தின் படத்தை கொண்டு வந்து சந்தானத்தை மாப்பிள்ளை கேட்டனர். சந்தானத்தின் பெற்றோர் எல்லா படங்களையும் சந்தனத்தின் தம்பி சாரு முலமாக ஈமெயில் பண்ணி இருந்தனர். ஈமெயிலை திறந்த சந்தானத்துக்கு தலை கால் புரியாத சந்தோசம். உடனேயே தொலைபேசியில் தாயிடம் கூறி விட்டான், தனத்தை பேசி முடிக்கும் படி.

மிக விரைவிலே திருமணம் நிச்சயிக்கப்பட்டு சந்தானம் நாடு திரும்பி இருந்தான். சந்தானம் வந்ததும் திருமண ஏற்பாடுகள் மளமளவென ஆரம்பமாகின. பந்தல் போடல், மாப்பிளை பார்த்து, கொழக்கட்டை கொடுத்தல், பெண் பார்க்க புட்டு கொண்டது செல்லல் என எல்லாம் விமர்சையாக நடந்தன. சந்தானம் நாடு திரும்புவதற்கு முதலே தினமும் தனத்துடன் அரைமணி நேரத்திற்கு குறையாமல் பேசிவந்தான். இதுவரை காலமும் பேசாத காதல் கதை முழுவதையும் சந்தானம் பேசினான். ஆனாலும் இன்னுமும் முடியவில்லை.

முந்தநாள் காலை பொன்னுருக்கு வைத்தனர். அன்று மாலை தனத்தை பார்க்க கிளம்பிய சந்தானத்தை அவன் அம்மா மெதுவாக உள் அழைத்து
     தம்பி பொன்னுருகினா வீட்ட விட்டு நீ வெளிய போககூடாது. இரண்டு நாள் தானே! பிறகு அவ உன்னோட தானே காலம் முழுக்க இருப்பா பொறுமையா இருடா

 அன்பாக வேண்டினாள். தட்ட முடியவில்லை அம்மாவுக்கு என்ன தெரியும்பார்க்காமல் பேசாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம்….

          ‘இதோ இன்றோடு மூன்று நாள் முடியும். நானும் தாலி கட்டி விடுவேன்.ம்............மேளச்சத்தம் கேட்கிறது.அவியல் வரியினம் போல'

பெண் வீட்டார் மாப்பிள்ளை அழைக்க வந்திருந்தனர். மாப்பிள்ளைக்கான வேஷ்டி சால்வைகள் தட்டில் வந்திருந்தன. தட்டை கொண்டு சாமியறையினுள் வந்தாள் அம்மா

          “தம்பி இந்த வேஷ்டி சால்வைய கட்டு நான் உண்ட மாமா மாமிக்கும் தோழனுக்கும் சாப்பாடு போடணும். கெதியா கட்டு ராகு காலத்துக்குள்ள அங்க போய் நீ மணவறையில் இருக்க வேணும்

என்ற படி வெளியேறினாள். அவன் வேஷ்டி கட்டி முடித்ததும் வீடியோ படப்பிடிப்பாளர்கள் அவனை விதம் விதமாக படம் பிடித்தனர். அப்பா அவர்களை அவசரப்படுத்தினார்.

இதோ சர வெடி முழங்க மேளதாளங்களுடன் தனம் வீடு நோக்கி சந்தானம் புறப்பட்டாகி விட்டது. வாசலில் தோழன் கால் கழுவி விட அவன் கையில் ஒரு ஒன்றரை பவுன் மோதிரத்தை எடுத்து போட்டான் சந்தானம். பின்னர் மணவறையில் சென்று அமர அங்கு தயாராய் இருந்த ஐயர் அவன் கையில் தருப்பை புல் மோதிரத்தை செருகி
    
     'சுக்கிலாம் பரதம் ........'

என மந்திரத்தை ஆரம்பித்து அவன் கையில் மஞ்சள் கங்கன நூலைகட்டி, பெண்ணை அழைத்து வர செய்து அவள் கையிலும் நூலைக்கட்டி திருமண கன்னிகாதான கிரியைகளை வேகமாக நடத்தினார். அவன் வீட்டார் கொண்டு வந்த கூரைப்புடவை தனம் கையில் கொடுக்கப்பட்டது. தாளித்தட்டு சபையோரின் ஆசிர்வாதத்திற்காக சந்தானந்தின் தந்தை எடுத்துச்சென்றிருந்தார்.

     'இன்னும் அரை மணி நேரத்தில் தனம் எனது மனைவி'

சந்தானம் தனது மனதில் நினைத்துக்கொண்டான். தனம் மீண்டும் வந்து மணவறையில் அமர்ந்தாள். ஐயர் சந்தானத்தின் கையில் தாலியை கொடுத்து விளக்கை எடுத்து தம்பதியினரின் பின்னால் இருந்தவர்களிடம் கொடுத்து தாலி கட்டுவதற்கான பூர்வாங்க வேலைகளை முடிந்தவுடன், சந்தனத்திற்கு கண்ணால் சைகை செய்தார். இந்த கணத்திற்காக காத்திருந்த சந்தானம் தனம் கழுத்தில் மங்கள நூலை அணிவித்தான்.

     கெட்டி மேளம்....... கெட்டி மேளம் ......மாங்கல்யம் தந்து நானே நாம ஜீவன கேதுநாம் வந்தே சுப பத்திராணி தோம் ஜீவ சரத்ச்சரம்.......

கெட்டி மேளம் கொட்ட தாலியை கட்டினான் சந்தானம்.

          “பளார்..... பளார் ….”

வெளியே சரவெடி! இல்லை சந்தானத்தின் முதுகில் வலிப்பதுபோல் உணர்ந்தான். அவனுக்கு நிலைமை புரியவில்லை. ஆனாலும் தாலியை கட்டி தனத்தை தன்னவளாக்க அவசரம் அவனுக்கு. மீண்டும்

     பளார்.......”

இப்போது சந்தானத்திற்கு அதிகமாக வலித்தது. பின்பக்கம் நிமிர்ந்து திரும்பினான் சந்தானம், தாலியை எடுத்துக்கொண்டு.

என்ன சுப்பிரமணியம் சேர் கையில பூவரசம் தடியோட பொடிகள் எல்லாம் கொல் என்று சிரிக்கும் சத்தம்.

          “சனியன் போன வருஷம் O/L பெயில் விட்டுட்டு திருப்பி படிகுறன் எண்டு, பெத்ததுகளின் காசை காரியாக்க பேசல் கிளாஸ் வரது...... அம்மா கணிதப்பாடத்துக்கு போட்டு வாறன் எண்டுட்டு.......... இங்க வந்து நித்திரை கொண்டு பகல் கனவு காணுதுகள்........”

திட்டியபடி மீண்டும் அடித்தார் சேர்.

          “அப்ப எப்படி எண்ட கையில தனத்திற்கு நான் கட்ட எண்ட தாலி எண்ர கையில.......

நினைத்தபடி கையைப் பார்த்தான் சந்தானம். அங்கு கரும்பலகையில் அவன் சேர் வட்டம் வரைவதற்காக வைத்திருந்த நூல், துண்டுச்சோக்கோடு இருந்தது. வகுப்புக்கு முன்பாகவே வந்து அதை எடுத்து ஒளித்து வைத்தது இப்போது ஞாபகத்திற்கு வந்தது.

வல்வையூரான்


Post Comment

7 கருத்துகள்:

 1. ஆஹா........எவ்வளவு சீரியசா மூஞ்ச உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மென்னு வச்சிக்கொன்னு படிச்சேன்..கடைசில செம மேட்டர சொல்லி முடிச்சிட்டீங்களே பாஸ்....

  சூப்பர் பதிவு தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் சிட்டுக்குருவி. நான் ஒண்டும் சீரியசான ஆளு இல்லை. காமடி பீஸ்தான்.

   நீக்கு
 2. கலக்கல் பாஸ்!! நிசமாலுமே சிரித்துவிட்டேன் முடிவில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மைந்தன் சிவா நீங்கள் சிரித்ததை இட்டு சந்தோசம். தொடர்ந்தும் சிரித்து வாழுங்கள். தொடர்ந்தும் என் பக்கத்துக்கு உங்கள் ஆதரவை எதிர் பார்கின்றேன்.

   நீக்கு
 3. தெளிவான கதையோட்டம்,
  எதிர்பாராத முடிவு.
  பள்ளிகூட வாழ்வும், பருவ வயதும் ஒரே நேர் கோட்டில் பயனிப்பதுவும் ஒரு சுவாரசியம் தான்..

  பதிலளிநீக்கு
 4. :) ஹா ஹா !! சீரியஸ படிச்சேன் !! சிரிக்க வச்சிட்டீங்களே ! சூப்பர் அண்ணா :) :)

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.