சந்தோஷ் பருத்தித்துறை சந்தை துவிச்சக்கர வண்டி பாதுகாப்பிடத்தில்
தன் துவிச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு நிமிரவும் அவன் யாழ் செல்லவேண்டிய 750 பஸ் புறப்பட்டு செல்லவும் சரியாக இருந்தது.
பெருமூச்சொன்றை விட்டன். இன்று பஸ் வேறு குறைவு குஞ்சர்கடை
சந்தியில் எதோ பிரச்னை என்று 750 மினி பஸ் ஏதும்
ஓடவில்லை. இந்த பஸ் விட்டால் அடுத்து 8 .30 தான் வரும். அதில் சென்றால் வேலைக்கு பிந்திவிடும். சிந்தனையை அலைய
விட்ட படி மெதுவாக பஸ் தரிப்பிடத்திற்கு வந்தான் சந்தோஷ். வந்தவன் வந்து நிற்கவும்
ஓர் 751 மினி பஸ் ஒன்று ‘ஹாங்........’ பலமாக ஹோன்
அடித்து தரிப்பிடத்திற்கு வந்து நின்றது. 751 என்றால் வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி, வல்லை, அச்சுவேலி எல்லாம் சுத்தி தான் யாழ் செல்லும். 750 விட பத்து நிமிடம் கூட ஆகும். பரவாயில்லை' என நினைத்த படி காலியாக இருந்த பஸ்ஸினுள் ஏறி அமர்ந்தான் சந்தோஷ்.
சந்தோஷ் நல்ல அழகன். நீண்ட எடுப்பான நாசி. நெளி நெளியான கேசம்.
சற்று நீண்ட கிருதா. அடர்ந்த மீசை பார்பவரை வசீகரிக்கும் கண்கள். வெண்மையான மேனி
என ஒரு தரம் பார்த்தவர்கள் சந்தோஷை மறு படி பார்க்கத் தூண்டும் அழகன். யாழ் போதனா
வையித்தியசாலையில் இரத்த வங்கியில் மேலாராக வேலை செய்கிறான்.
"தம்பட்டி, வியாபாரிமூலை, திக்கம், பொலிகண்டி, வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி ஏறுங்கோ. சீட் இருக்கு சீட் இருக்கு"
பலமாக குரல் கொடுத்தார் நடத்துனர். ஓட்டுனர் தன் பங்குக்கு "ஹாங்.....
ஹாங்..... ஹாங்....." பலமாக இரு முறை ஹோன் அடித்தார்.
"தம்பி இது சன்னதி போகுமோ....?"
வயதான ஒருத்தர்
"ஐயா வெள்ளிக்கிழமைகளில் தான் சன்னதி போகும் பின்னால 752 நிக்குது அதில போய் ஏறுங்கோ......... ரைட்........ ரைட் எடுங்கோண்ணே....."
என கத்தினான் நடத்துனன். பஸ் பலமாக ஓர் இரைச்சல் இறைந்து அந்த
இடத்தையே கரும்புகையால் நிறைத்து விட்டு புறப்பட்டது.
சந்தோஷ் பஸ்ஸின் வாசலுக்கு இரண்டு சீட் பின்னலையே இருந்த சீட்டில்
அமர்ந்த படி ஜன்னலின் வழியாக பார்வையை ஓட விட்டான். பஸ் வியாபாரி மூளை வந்ததும்
எதிரே நீலக்கடல் அவனை ‘வா’ என்றது போல் இருந்தது.
சந்தி திரும்பி KKS ரோட்டில் பஸ் செல்லும் போது அவன் எதிர் பக்கம் இருந்த ஜன்னலால் கடலை பார்த்தான். கடலில் ஓரிரு
கலங்கள் மட்டும் தெரிந்தது. சில கடற்கலங்கள் கரைக்கு வந்திருந்தன. நிலைமை சரியாக
இருந்திருந்தால் முதல் நாள் மாலை அல்லது இரவில் செல்லும் வள்ளங்கள் விடிவதற்குள்
கரைக்கு மீன் அள்ளி வந்திருக்கும். இன்றைய நிலையில் எத்தனை கட்டுபாடுகள். அவர்கள்
விடிந்ததின் பின்னர் தான் தொழிலுக்கு செல்ல முடியும். இந்த நிலை என்று மாறுமோ.....? கடலையும் கடல் வாழ் மக்களையும் அவர்கள் நிலைமைகளையும் நினைத்த படி
இருந்தவன்.
"பொலிகண்டி கந்தவனம் இறங்குரவையல் முன்னுக்கு வாங்கோ"
என்ற நடத்துனரின் குரல் நிஜத்திற்கு இழந்து வந்தது. தன் பக்க
ஜன்னலுடாக பார்த்தான் எதிரே கந்தவன முருகன் கோவில்! தாயோடு ஒரு முறை கந்தசஷ்டி
சூரன் போருக்கு கந்தவனம் வந்திருக்கின்றான். வணங்க நினைத்து கைகளை எடுத்தவன்
பார்வையில் எதிரே அவசர அவசரமாக பஸ்ஸை பிடிக்க கைப்பை ஒரு கையில் பிடித்த படி ஓடிவரும்
பெண்ணின் மீது படிந்தது. படிந்த பார்வையை வலுக்கட்டாயமாக எடுத்து முருகனிடம்
செலுத்தி அவசரமாக ஓர் வணக்கம் செலுத்தி மீண்டும் பெண்ணின் மீது செலுத்தினான்.

என்ற நடத்துனரின் குரல் அவன் கவனத்தை கலைத்தது.
"அம்மா உடுப்பிட்டி வந்தா சொல்லுவன். பின்னுக்கு கொஞ்சம் போன... அண்ணா
கொஞ்சம் உள்ள போங்கோ....... இன்னும் பின்னால... அவையல் இப்ப இறங்குவினம் நீங்கள் அதில
இருக்கலாம். உள்ள போங்கோ.... அக்கா.... நீங்க யாழ்பாணம் தானே? தயவு செய்து உள்ள போங்கோ..... நாங்க மத்தாக்களையும் ஏத்தோனும் தானே....."
என்ற படி அனைவரையும் உள்ளே எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடைந்து
கொண்டிருந்தான் நடத்துனன்.
ஜன்னலுடாக ஒவ்வருத்தராக நடத்துனன் உள்ள அனுப்பும் அவன் கெட்டிக்காரத் தன்மையை மனதுள் மெச்சிய சந்தோஷ் கடைசியாக யாரை அனுப்பினான் என பார்க்க உள்ளே திரும்பினான்.
ஜன்னலுடாக ஒவ்வருத்தராக நடத்துனன் உள்ள அனுப்பும் அவன் கெட்டிக்காரத் தன்மையை மனதுள் மெச்சிய சந்தோஷ் கடைசியாக யாரை அனுப்பினான் என பார்க்க உள்ளே திரும்பினான்.
அவன் அமர்ந்திருந்த இருக்கையை ஓர் கையாலும் அவனுக்கு முன் இருந்த
இருக்கையை மற்ற கையாலும் பிடித்த படி அவன் அளவெடுத்த அழகுப்பதுமை அவனுக்கு அருகில்
நின்றிருந்தாள்... இல்லை... இல்லை... நிற்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். அவள்
நிற்பதற்கு கஷ்டபட்டாலும் அவளும் நம் அழகனை கண்களால் மெய்ந்துகொண்டுந்தான்
நின்றாள். சந்தோஷ் ஜன்னலால் வெளியே பார்த்துகொண்டிருந்தவன் திடீரென திரும்பி அவளை
பார்பான் என அவள் நினைக்கவில்லை. அவன் பார்வை அவள் பார்வையை சந்திக்கவும் மிகுந்த
சங்கடத்துடன் தலையை தாழ்த்தி நிலம் பார்த்தாள். பார்வைகள் ஒரே ஒரு கணம்
சந்தித்துக்கொண்டன. அவள் நிற்பதற்கு கஷ்டபடுவதை பார்க்க சந்தோஷிற்கு ஏதோபோல்
இருந்தது.
"இஞ்ச நீங்க இதில
இருங்கோ... நான் நிக்குறன்"
என்ற படி சந்தோஷ் இருக்கையை விட்டு எழுந்து நின்றான்.
"ஆ... இல்ல "
என்றவள் அவன் எழுந்து நின்று இடம்தரவும்
"தா....தாங்க்ஸ்"
என்ற படி அவன் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
"இந்த பாக்க கொஞ்சம் வைச்சிருக்க முடிமோ"
மெதுவாக கேட்ட படி தன் தொழில் தோக்கிய பையை அவளிடம் கொடுத்தான். அவள்
அதைப் பெற்றுக்கொண்டு
"சொ... சொறி நானே வாங்கியிருக்கோணும்.
தாங்கோ நான் வைச்சிருக்கன்"
என்றாள்.
"அதில என்ன பரவால நீங்க யாழ்ப்பாணம் தானே போறிங்கள்?"
"ஓம் நான் யாழ்ப்பாணம் தான் போறேன். ஆஸ்பத்திரி ரோட்டில் இருக்குற
இலங்கை வங்கியில வேலை செய்யுறன்"
என மெதுவாக ஆரம்பித்த சம்பாசனையில் சந்தோஷ் அவளைப்பற்றி சில விசியங்களை
தெரிந்து கொண்டான்.


இருவருமே
பொதுவாக அமைதியான குணம் கொண்டவர்கள். பஸ்ஸில் யாருடனும் பேச்சு வைத்துக் கொள்வது
இல்லை. ஆனால் இன்று இருவரும் மணம் விட்டு ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டனர்.
பஸ்
யாழ் வந்ததும் அவரவர் இடங்களில் அவரவர் இறங்கிக் கொண்டனர்.
மதியம்
12.30 இருக்கும். சந்தோஷ் மதிய உணவை எடுத்துக்கொண்டு சாப்பிடல்லாம் என அமர்ந்தான்.
இன்று முழுவதும் ரேவதியின் நினைவு வந்து அவனை அலைக்கழித்தது. அவன் வேளையில் பல
பெண்களைச் சந்திப்பவன். பல மாதர் சங்கங்கள், அமைப்புகள் என பல தரப்பினர் இரத்த
தானம் செய்ய இரத்த வங்கிக்கு வருவார்கள். பலரோடு அவன் பேசி பழகி இருக்கிறான்.
ஆனால் ரேவதி அளவுக்கு அவன் மமதை யாரும் பாதித்ததில்லை. அவள் கண்கள்... முக
வெட்டு... என ஒவ்வொன்றாக நினைவுகளை மீட்டியபடியே சாப்பாட்டு டிபன் மீது கையை
வைக்கவும்
“சேர் மன்னிக்கோணும். நடா சேர் பாங்கில
இருந்து ஆட்கள் வந்திருக்கினமாம்; உங்களை ஒருக்கா வந்திட்டு போக முடியுமோ எண்டு
கேட்டு வரட்டாம்”
என்றபடி
வந்தான் ஒரு சிப்பந்தி.
“பாங்கோ எந்த பாங்க்... சாப்பிட போறன்...
சாப்பிட்டுடு வாரனே...”
“சரி சேர் இங்க பக்கத்துக்கு இலங்கை வங்கி
ஆட்கள் தான். ஏதோ அவையள் இண்டைக்கு ரத்ததான நாள் ஏதோ அவையண்ட பாங்கால
கொண்டாடுறினமாம். அதான்...”
சிப்பந்தி
மேலே ஏதோ தொடர்ந்து கொண்டிருந்தது ஏதும் அவன் காதில் விழவில்லை. பாய்ந்து விழுந்து
வெளியேறி இரத்ததானம் செய்யும் இடத்துக்கு விரைந்து சென்றான் சந்தோஷ். சென்றவன்
கண்கள் சங்கு நின்ற முப்பது முப்பத்தைந்து பேரினுள் ரேவதியைத் தேடின.
இவன்
கண்கள் ரேவதியைக் கண்டுபிடிக்கவும், அவளும் இவனை ஆச்சரியத்துடன் பார்த்து இவனிடம்
வந்து
“நீங்கள் ரெத்த வங்கிலையோ வேலை பாக்கிறியள்.
ஆஸ்பத்திரி எண்டுல்லே சொன்னியள்...”
என்றாள்.
‘ரெத்த வங்கி ஆஸ்பத்திரில இல்லாமல் சங்கக்
கடையிலையோ இருக்குது...”
எனக்
கேட்டு சிரித்த சந்தோஷ்,
“இண்டைக்கு என்ன திருப்பி திருப்பி
சந்திக்கிறம்... அதோட நீங்கள் என்னை வேலை செய்ய விடாம காலைல இருந்து டிஸ்டப்
பண்ணுறியள்”
செல்லமாக
கோபித்தான் சந்தோஷ். அவளும் மெதுவாக புன்னகைத்து
“நீங்கள் மட்டும் என்னவாம்...
ஆஸ்பத்திரிக்குள்ள வந்தது முதல் உங்களை தேடினான்...”
என்றாள்.
மொட்டு
விரிய ஆரம்பித்த மலர் மேல் வண்டு சுற்றி வர ஆரம்பித்தது.

சந்தோசமாக
சென்ற சந்தோஷ் ரேவதி காதல் தேர் முட்டுக்கட்டை போடப்பட்டது. ஆம்! ரேவதி வீட்டில
அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். மிக விரைவில் ஓர் வெளிநாட்டு
மாப்பிள்ளையின் ஜாதகம் ரேவதியின் ஜாதகத்துடன் பொருந்தி வர திருமண ஏற்பாடுகள்
மளமளவென ஆரம்பிக்கப்பட்டன.
நிலைமையின்
தீவிரம் உணர்ந்த காதலர்கள் தங்கள் காதலை தாங்கள் பெற்றோருக்கு தெரிவிப்பது என
முடிவு செய்தனர்.
சந்தோஷின்
வீட்டில் சந்தோஷ் கடைக்குட்டி. அவன் விருப்பம் தான் வீட்டின் விருப்பம். காதலுக்கு
பச்சைக்கொடி காட்டப்பட்டது. ஆனால் ரேவதி வீட்டில் தாய் தந்தையர் விண்ணுக்கும்
மண்ணுக்கும் குதித்தனர். வீடு இரண்டுபட்டது. ரேவதி வேலையால் நிறுத்தப்பட்டாள்.
வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டாள். பெண் கேட்டு சென்ற சந்தோஷின் பெற்றோர்
ரேவதி வீட்டாரால் கண்டபடி திட்டி அவமானப்படுத்தப்பட்டனர்.
சந்தோசமாக
ஓடிய காதல் தேர் இப்போது சக்கரம் கழன்ற தேரானது.
தேவதாஸ்
போல் தாடி வைத்து எதிலும் பற்றற்று நடைபினமானான் சந்தோஷ். வலுக்கட்டாயமாக ரேவதி
அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை இருந்த நாட்டுக்கு அவள் வீட்டார் செலவில்
அனுப்பப்பட்டாள், ஏஜென்சி மூலமாக.
நடை
பிணமான சந்தோஷ் வேலையை விட்டான். சந்தோஷின் பெற்றோர் அவனை இங்கு வைத்திருந்தால்
அவனை மீட்க முடியாது என கருதி அவனோ அழைத்துக்கொண்டு கொழும்பு வந்தனர்.
மிக
விரைவிலேயே சந்தோஷிற்கு ஓர் வெளிநாட்டு வாய்ப்பு வாசல் தேடி வந்தது. தான்
வெளிநாட்டு மாப்பிள்ளை இல்லாது போனதால் தானே தன்னை வேண்டாம் என்றார் ரேவதியின்
அப்பா, என்ற கோபம் சந்தோஷின் மனதில் இருந்தது. நானும் வெளிநாட்டு மாப்பிள்ளை ஆகி
காட்ட வேண்டும் என்ர வெறியில் வந்த வாய்ப்பை பயன்படுத்தி வெளிநாடு சென்றான்
சந்தோஷ்.

ரேவதி
எந்த நாட்டுக்கு போனாளோ அதே நாட்டுக்கு தானும் போகின்றோம் என்பது அவனுக்கு
தெரிந்திருக்கவில்லை. அவுஸ்திரேலியா சிட்னி நகரில் விமானம் தரை இறங்கியது. சந்தோஷ்
வெளியே வந்து அகதி அந்தஸ்து கோரினான். மிகவிரைவில் அதுவும் கிடைத்தது. நல்ல வேலையும்
கிடைத்தது. சில காலம் அமைதியாக அவன் வாழ்வு சென்றது. அது புயலுக்கு முந்திய அமைதி!
நீண்ட
நாள் ஆங்கில சாப்பாடு. நாக்கு இலங்கை சாப்பாடு உறைப்பான கோழிக்குழம்பு கேட்டது.
‘ஸ்ரீலங்கன் பூட் சென்றார்’ என்ற
இலங்கை தமிழர் கடைக்கு கால்கள் தாமாகவே இழுத்து சென்றன. அரிசிமா இடியப்பத்திற்கும்
கோழிக்குழம்புக்கும் முட்டை பால்கறிக்கும் சொல்லிவிட்டு காத்திருந்தான் சந்தோஷ்.
கடையை சுற்றுமுற்றும் நோட்டம் விட்டான்.
நீண்ட
நாட்களின் பின் தமிழில் அறிவிப்புகளைக் கண்டான் சந்தோஷ். கடை ஓரளவான கடை.
நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. பின் பகுதி
கண்ணாடியால் தடுக்கப்பட்டு அங்கே சாப்பாடுகள் தயாரிக்கப்பட்டான்.
ஆ...
இதென்ன ரேவதி போல் இருக்கிறதே... எழுந்து விரைந்து சென்றான் சந்தோஷ். கண்ணாடியை
இவன் அண்மிக்கவும் ரேவதி அவனைப் பார்க்கவும் சரியாக இருந்தது. மீம்டும் கண்கள்
சந்தித்துக் கொண்டன. இருவர் கண்களும் குளமாகின. அவசர அவசரமாக இருவரும் கண்களைத்
துடைத்துக் கொண்டனர்.
அவள்
கைகளைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தால் அவனிடம்.அவனுக்கும் அவளைக் கண்டதும்
பலத்த மகிழ்வைத் தந்தாலும் இன்னொருவன் மனைவி... என்ன அவள் கழுத்தில் தாளை இல்லை.
ம்... போட்டுகூட கருத்த போட்டுத்தான்... எண்ண அலைகல்வேறு மாதிரி தோன்றினாலும் அவன்
மணம் அப்படி ஏதும் நடந்திருக்க கூடாது அவளுக்கு என தெய்வங்களை வேண்டியது.
இருவரினதும்
உணர்வலைகளும் பொங்கி அடங்கியதும் அவனுக்கு அவள் சொன்ன செய்தி அவனை அதிர்ச்சியில்
உறைய வைத்தது.
அவள்
அவுஸ்திரேலியா வந்த பின் தான் அவள் அறிந்தால் அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை இங்கு
இரு குழந்தைகளுக்கு அப்பா என்றும் அந்த பெண்ணுடன் மேனாட்டு வழக்கப்படி கலியாணம்
முடிக்காமலே இணைந்து வாழ்ந்து வருகின்றான் என்பதும்.
இந்த
பிரச்சனைகளை பெற்றோருக்கு அறிவித்து அவர்களை வேதனைக்குள்ளாக்க விரும்பாத ரேவதி
அவனை திருமணம் செய்யாது விலகி தனியாக வசித்து வருகின்றாள். சாப்பாட்டு கடையிலையும்
வேறு ஒரு சுப்பர் மார்கெட்டிலும் வேலை செய்து கொண்டும் கணக்கியலில் சிறப்பு பட்டம்
பெற படித்துக்கொண்டும் இருக்கிறாள்.

காதல்
தேருக்கு இருந்த முட்டுக்கட்டை விலகி விட்டது. பிறகென்ன? மலர்ந்த மலர் மேல் வண்டு
சும்மா சுற்றி வருவானேன். மலர்மேலமர்ந்து தேனருந்தலாமே. பழம் நழுவி பாலிலல்லவா
விழுந்திருக்கிறது.
Tweet | ||||
சுவாரசியமாக தொடங்கி சிந்திக்கும் வண்ணம் முடித்தவிதம் அருமைக் கதை .வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குவெளிநாட்டு மாப்பிள்ளைகள் என்றால் எல்லாரையும் தப்பாக பார்க்கும் நம்மவர் பார்வைக் காலம் மாறவேண்டும் . அறியாமை என்று சொல்லி விலகமுடியாது என்ற இடத்தில் நான் கொஞ்சம் முரண்படுகின்றேன்!
பதிலளிநீக்குகாதலர்களுக்கு ஏற்படும் வழமையான பிரச்சனைகள்...
பதிலளிநீக்குஅழகான முடிவு சினிமா பார்த்தது போன்று உள்ளது
கதை தொடங்கி முடிந்த விதம் எதிர்பாராதது.இப்படியான முடிவு கதலர்களுக்குக் கிடைப்பது மிக மிக அரிது.பலரது வாழ்வில் கடக்கும் காதல் ஆனால் இன்னொருவர் கையோடு.அருமை முகுந்தன்.வாழ்த்துகளும் பாராட்டும் !
பதிலளிநீக்குஅற்புதம் அண்ணா...!!! எல்லா காதலும் இப்படி வெற்றி பெற்றால் எவ்வளவு நன்றாய் இருக்கும்...!!! அண்ணா மிக்க நன்றி.. உங்கள் மினி பஸ் வர்ணிப்பு அருமை...!!! 751 இல் பயணம் செய்த உணர்வை அனுபவித்தேன்...!!!
பதிலளிநீக்குஅருமை... அருமை... எஅல்ல காதல் கதை.. அப்புறம் உண்மையாவே நானும் அந்த பேருந்தில் பயணித்தேன்.. வாழ்த்துக்கள் தொடர...
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே...
பதிலளிநீக்குஅழகான வர்ணனைகளுடன்..
இனிய காதல் கதை சகோதரரே....
கோர்வையாக செல்கிறது கதை....
படிக்கையில் முட்டுக்கட்டை இல்லாத தேர் தான்.
நானும் ஏதோ தேருக்கு கட்டை வைக்கிறத சொல்ல போறீங்கன்னு வந்து பார்த்தா,போங்க சார் போங்க, இந்த தேருக்கு கட்டை வைக்கிறதை பற்றி எழுதணும்.
பதிலளிநீக்குசுவையான கதை! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு