சனி, 7 டிசம்பர், 2013

தேடித் பார்க்கின்றேன்


இன்னமும் பெரிதாக எதுவும்
இங்கு மாறிவிடவில்லை
எல்லாம் அப்படியே இருக்கின்றன


இயல்பாகவே மண்ணில் இருக்கும்
செங்குருதியின் நிறம்
தோட்டத்தின் நடுவே
இழுத்து போடப்பட்டு
உருண்டு போய் பந்தாக
காவிளாச்செடிகள்
பச்சையாக வெட்டி
சூடு மிதிக்கப்பட்ட
பனை ஓலைகளும்
மூரி மட்டைகளும்
வேலிக்கரையில் வளர்ந்து
ஆழமாக வேர் விட்ட அறுக்கம்புல்
வேலியில் படந்து
காய்த்து தொங்கும் பாவல்காய்


முன்னர் பாட்டி வைத்த இடத்திலேயே
அடுப்பு எரிக்க
இப்போதும் பனையின்
மட்டைகளும் கொக்காரைகளும்
அதே சாணி மெழுகிய நிலம்
தாத்தாவின் கயித்து கட்டில்
கொடியில் படபடக்கும்
தோய்த்த நாலுமுழ வேட்டி
துலா கயிற்று கிணறு
தாவாரத்தில் தொங்கும்
தென்னோலை பூக்குடல்
வானம் காட்டும்
ஓலைக் கீற்று கூரை
புகையேறிய கறுத்துப்போன
குமிழ் பல்ப்
ஓலைக் கீற்றில்
சிக்கிய நூலில்
தொங்கும் கொசுக்கூட்டம்
சன்னமாக எரியும் குத்துவிளக்கு
மூலையில் சுருட்டி வைத்த
ஓலைப்பாய்
அதே அலுமினியம் பாத்திரங்கள்
சீனி போட்டு வைக்கும்
தகர டப்பா
வாசலில் பூக்கும்
செவ்வரத்தம் பூ
முல்லைப் பல் காட்டும்
நித்தியா கல்யாணி
முற்றத்தில் நிற்கும்
கொய்ய மரத்தில்
அணிலின் கூடு
கிளியும் அணிலும்
கடித்து போட்ட
விலாட்டு மாமரத்தின்
அங்கொன்றும் இங்கொன்றுமான காய்கள்

இப்படி
இன்னமும் பெரிதாக எதுவும்
இங்கு மாறிவிடவில்லை
எல்லாம் அப்படியே இருக்கின்றன

இவற்றோடு ஒட்டி
இவற்றை அணு அணுவாக ரசித்து
அனுபவித்து
இவற்றோடு வாழ்ந்து
இவற்றை சொர்க்கமாக எண்ணி
வாழ்ந்த என்னை
தேடித் தேடித் பார்க்கின்றேன்
என்னால் காணமுடியவில்லை

இவற்றிலிருந்து அந்நியனாகவே
இப்போது நான்

ஏனெனில்
நான்
புலத்தில் இருந்து வந்தவன்

இன்னமும் பெரிதாக எதுவும்
இங்கு மாறிவிடவில்லை
எல்லாம் அப்படியே இருக்கின்றன

வல்வையூரான்.

Post Comment

13 கருத்துகள்:

 1. உங்கள் நினைவோடு என் நினைவுகளும்
  ஊரை நோக்கிப் பறக்கத் தொடங்கிவிட்டது சகோ!..

  வரிக்குவரி சொல்லிச் சென்ற வார்த்தைகள்
  இன்றைய நம் வாழ்வின் வலிகள்...
  ஏக்கப் பெருமூச்சுக்கள்...
  அருமையான கவி வரிகள்!

  நினைவலைகளை மீட்ட வரிகள் தந்தமைக்கு
  நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

  பதிலளிநீக்கு
 2. நான் வாழ்ந்த உலகம் இதுதானா என்று
  எண்ணிப்பார்க்கச் சொல்லும் வரிகள்.
  ஒவ்வொரு விடையமும் இன்று எவ்வளவு
  தொலைத்திருக்கிறோம் என்று
  விளம்பரப்படுத்தி செல்கின்றன......
  விளம்பிய சொற்கள் எல்லாம் திரும்பத் திரும்ப படித்து
  ஏகாந்தம் கொள்ளச்செய்கிறது.
  உண்ணும் உணவுக்கு விதைநிலமாம் விளைநிலங்களையே
  கூறுபோட்டு விற்கும் நாம் இவைகளை எல்லாம்
  விட்டொழித்தவர்கள் ஆகிப்போனோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
  அருமையான வரிகள் சகோதரரே.

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் வாழ்ந்த உலகம் இதுதானா என ஏக்கத்தோடு எழுதியுள்ள வரிகள்... நாட்டைப்பிரிந்து வாழும் உங்களது வருத்தம், ஏக்கம் எல்லாம் உங்கள் வரிகளில் புலப்படுகிறது...

  நல்ல கவிதை... பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 4. ஏக்கம் தரும் உணர்வு மிக்க வரிகள் மனதை வருத்தம் கொள்ளச் செய்கின்றன...

  பதிலளிநீக்கு
 5. கடந்த கால நினைவுகளை மீட்டிப் பார்க்கும் போது இதே மன உளைச்சல் எல்லோரது மனதிலும் இப்படித்தான் மாறாமல் இருக்கின்றன என்று உணர வைத்த சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே .

  பதிலளிநீக்கு
 6. தோட்டத்தின் நடுவே
  இழுத்து போடப்பட்டு
  உருண்டு போய் பந்தாக
  காவிளாச்செடிகள் அப்புதம். நான் இன்னமும் அதை உணர்கிறேன்....சா.....மிக்க நன்றி என்னை அந்த உண்மை உலகுக்கு கொண்டு சென்றமைக்கு

  பதிலளிநீக்கு
 7. எதுவும் மாறவில்லை என்னை நானே தேடுகிறேன்...நுணுக்கமாக ஒவ்வொன்றையும் குறிப்பிட்டது அருமை.

  பதிலளிநீக்கு
 8. புலம் பெயர்ந்தோரின் ஒவ்வொருத்தரின் மனச்சுமை இவைகள் அருமையான கவிதை ஐயா! ஏக்கம் அதிகம் தான்!ம்ம்

  பதிலளிநீக்கு
 9. தமிழ் பதிவர்கள் இணைந்து நடத்தும் மாதமிழ் தளத்தில் தங்களின் பதிவுகளையும் இணைத்து உதவுமாறு அன்போடு வேண்டுகிறோம்

  http://maatamil.com

  நன்றி

  பதிலளிநீக்கு
 10. வணக்கம்
  சகோதரன்
  பல நினைவுகள் சுமந்த கவிதை மிக அருமையாக உள்ளது.. படங்களும் மிக நன்று பல தடவை தங்கள் தளத்துக்கு வந்து திரும்பி போனதுதான்.. ஏன் என்றால் கருத்து எழுதும் போது விண்டோ இல்லாமல் போய்விடும்.. கேசர் வேலை செய்யாது. அதனால் தட்டச்சு செய்யவும் முடியாது…
  இந்த கருத்து வேறு பகுதியில் தட்டச்சு செய்து பின்பு இடுகிறேன்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 11. வணக்கம்
  சகோதரன்
  பல நினைவுகள் சுமந்த கவிதை மிக அருமையாக உள்ளது.. படங்களும் மிக நன்று பல தடவை தங்கள் தளத்துக்கு வந்து திரும்பி போனதுதான்.. ஏன் என்றால் கருத்து எழுதும் போது விண்டோ இல்லாமல் போய்விடும்.. கேசர் வேலை செய்யாது. அதனால் தட்டச்சு செய்யவும் முடியாது…
  இந்த கருத்து வேறு பகுதியில் தட்டச்சு செய்து பின்பு இடுகிறேன்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

 12. வணக்கம்!

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
  நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
  சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
  தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  01.01.2014

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.