ஞாயிறு, 11 நவம்பர், 2012

இரண்டன்றி வேறில்லை

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
தண்ணொளி நோக்கலில் தாழ்த்தி நிலம் நோக்கினாள்
பண்ணொலிப் பாடல் அவன் செவ் வாயில்
கண்ணொளி வீசி வெட்கி குனிந்தோடினாள்


குனிந்தோடியவள் குறுக்கே அவள் தந்தை வர
தனித்தே நடந்தாள் மயிலொத்த மென் நடையாள்
இனித்தே மகளை நோக்கி இன்முறுவல் புரிந்த தந்தை
கனித்தேனே  இவ்விடம் நும்பணி என்னென்றார்

அன்னை இவ்விடம் ஏவினாள் என்னை என
கண்ணை சிமிட்டி கதை எதோ கூறி மகள்
பெண்மை நாணம் காட்டி பேதை மீண்டும்
தன்னை உள் மறைத்து தையல் மீண்டும் மறைந்தாள்

தந்தைக்கு தாயிற்கு உற்றதுக்கு மறைத்த காதல்
எந்தை நீ என்றாள் என்னவனே மன்னவனே என்றாள்
முந்தை வினை நான் உன்னை கண்டது என்றும்
கந்தையான என் வாழ்வை களிப்பிக்க வந்தவன் நீ என்றாள்

சித்திரமே சிறு பெண்ணே சிங்காரக் கண்ணே
எத்திறமும் கொண்டவளே என்னை நெஞ்சில் சுமந்தவளே
நித்திரை கொள்ள விடாது என்னில் நீக்கமற நிற்பவளே
உத்தரத்தெழும்  மூச்சு காற்றனவளே  என்றான் அவன்

கற்பனையில் பிறந்த காதல் கண்கள் வழி நுழைந்த காதல்
தற்பெருமை கொள்ளாக் காதல் தரணிக்கு தெரியாக் காதல்
சிற்றின்ப ஆசை இல்லாக் காதல் சிறுக சிறுக வெளியே வந்தது
உற்பத்தி ஆனது உபத்திரவம் உலகக் கண்கள் ஊடுருவியதாலே

எத்தனை கண் கொண்டு பார்த்தாலும் ஏந்திழை யிவள்
பத்தரை மாற்று பசும்தங்கம் தான் மாசொன்றும் இல்லை
சித்தத்தை குளிர்விக்கும் அழகு  சிந்தையில் நிர்பாளிவள்
இத்தனை இருந்து என்ன இவளோர் கீழ்சாதியாம்.

வெண் சீர் பற்கள் கண் சீர் அழகுள்ளாள்
பண் சேர் பேச்சுள்ளாள் பகட்டேதும் இல்லாதாள்
மண் பார்த்த நடைகொண்டாள் மங்கைக்குள் அரசொத்தாள்
விண் சேர் தேவரெல்லாம் வியந்து பார்க்கும் வித்தகிதான்

அற்புதப் பெருமைகள் அத்தனையும் தன்னகத்தே கொண்டவள்
நற் பண்புகளின் உறைவிடம் என்றேநன் றானவள்
சிற்பத்தை ஒத்தநிலை யழகு நிறைந்தே உள்ளவள் - இவள்
உற்பத்தி ஆனது தான் ஊர் ஒதுக்கும் சாதியாம்

ஊரவர் பார்த்தாதால் காதல் உருவாகியது புயலாக
பாரவர் பார்த்ததால் காதல் பயப்படத்தான் செய்தது
சீராக சென்ற காதலை சிதைக்க சிலர் வந்தனர்
சேராது சேர விடோமென்று செகத்தினில் கூறி நின்றனர்

தனயனின் வீடு சேர்ந்து தந்தையைக் கலந்து அங்கே
தினமொரு வகையாக் கூறி சீற்றத்தைத் தீயாய் மூட்டி
தனத்தினை அழித் தாயினும் தையலை அழிக்க வேணுமென்று
மனமதை உருவாய் ஏற்றினர் மக்கட் பண்பிலாதார்

தந்தையின் மன மறிந்த தனையனும் வெகுண் டெழுந்து
எந்தையே இங்கே இருப்பது இரு சாதியே
மந்தையைப் போல இங்கே மதிகேட்டவர் வந்து
முந்தைத் தவமதழிக்க உரைத்தனர் கேளாதீர் என்றான்

பெண்களில் நல்லாள் அவள் பேதையை விரும்பினேன்
கண்களைப் போல அவளைக் காப்பதாய் வாக்குரைத்தேன்
எண்களில் அடங்காது எந்தன் ஏந்திழையாள் பெருமைசொல்ல
எண்ணங்களில் அவளே என்னுள் ஏகமாய் நிறைந்துமுள்ளாள்

சாதி என்ற ஒன்று இங்கே சதிராடி எமைப் பிரித்தல்
நீதி இல்லை நிம்மதியுமில்லை உங்களுக்கும் எங்களுக்கும்
ஆதியான இறைவன் அளித்தது ஆண்பெண்சாதி இரண்டுமே
ஓதி உங்களை உருவேற்றினார் ஓரம் போங்க ளேன்றான்

மகன் எவ்வளவுதான் மதியுரை பகர்ந்த போதிலும்
அகம் முழுவதும் அடுக்கினர் மொழி கேட்டதால்
முகம் மலராது சிந்தையில் சினம் கொண்டு தீப்பறக்க
நகம் கொண்டுடல் கிழித்த நரசிங்க மொத்தான்

இங்கு மட்டு மல்ல அங்கும் அதே தான்
சங் கறுப்பேன் என்று கண்கள் குருதி யொக்க
பொங்கிய சினத்தோடு பேதையை அடித்த தந்தை
அங்கவள் தாயையும் ஆக்கினைகள் செய்தார்

இப்படி ஆனது இவர்கள் காதல் கதை
எப்படி நாங்கள் இங்கே வாழ்ந்திடல் கூடுமென்றே
செப்படி வித்தை செய்யும் செகத்தினில் இருந்துநாமும்
இப்படி என்னுமுன்னே மறைந்திடலே தகுமென்றாய்ந்தனர்

தகுமேன் றாய்ந்து தமக்குள்ளே தனித்தொரு முடிவு கண்டு
வேகு மிந்த உடல் மட்டுமே கொண்டது சாதி
ஆகுமோ அது வந்தெம் ஆருயிர் ஆத்மா பிரித்திடலென்றே
ஆகுதியாக்கினர் தம்முடல் இருவரும் தீக்குள்ளே


தீயினில் இருவரும் கருகிய பின்னரே வந்தனர்
வாயிலும் தலையிலுமடித்தே புலம்பினர் பெற்றோ ருற்றோர்
ஆயினும் அன்னவர் இருவர் மீண்டுதான் வருவாரோ யில்லையே
உயிரது போனபின் தான் உருவாகியதோ இந்தவறிவு

செகத்தினில் இருந்து சாதிய மொழியட்டும்
அகத்தினில் இருந்து அன்புமலர் மலரட்டும்
முகத்தினில் இருந்து முறுவல் தானரும்பட்டும்
தேகத்தினால் இருந்து சாதிப்பேய் தொலைந்தே போகட்டும்

வல்வையூரான்










Post Comment

14 கருத்துகள்:

  1. மூச்சு வாங்குது...:)


    ...............................................

    அன்னை பெண்மை பேதை தையல்.....ம்ம்ம்ம் தொடரட்டும்
    ரசித்தேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சிட்டு குருவி. சற்று நீண்டு விட்டது தான். ஆனாலும் தம் கட்டி படித்துள்ளீர்கள். நன்றிகள் நண்பரே.

      நீக்கு
  2. "செகத்தினில் இருந்து சாதிய மொழியட்டும்
    அகத்தினில் இருந்து அன்புமலர் மலரட்டும்.."
    கருத்துச் செறிவுள்ள நல்ல கவிதை.
    இருந்தபோதும் வார்த்தைச் செட்டு
    கவிதைக்கு நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா. வாருங்கள் இந்த இடத்துக்கு நீங்கள் வந்தது எனக்கு சிறப்பே. உங்கள் கருத்தினை கவனத்தில் எடுக்கிறேன். தொடர்ந்து வருகை தந்து உங்கள் மேலான கருத்துக்களை தரவேண்டும் என்று வேண்டுகோளும் விடுக்கின்றேன்.

      நீக்கு
  3. பெண்களில் நல்லாள் அவள் பேதையை விரும்பினேன்
    கண்களைப் போல அவளைக் காப்பதாய் வாக்குரைத்தேன்//ம்ம் அருமை வரிகள் தோழிக்கும் இந்த வரிகள் பொருந்தும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே. கண்டிப்பாக. அனைவர்க்கும் சொல்லலாம்.

      நீக்கு
  4. கவிதையை கொஞ்சம் நீட்டாமல் பார்த்து இருக்கலாம் ஐயா அவசர உலகம் !ம்ம் சாதியத்தை கண்டிக்கும் கவிதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் வந்து சொல்லும் கருத்துத்தான். இந்த கவிதை சற்று நீண்டது என்னவோ உண்மைதான். நன்றிகள் வரவுக்கும் கருத்திடலுக்கும்.

      நீக்கு
  5. இனத்தினில் இரண்டினமே
    அகத்தினில் ஒன்றிணோமே
    புறத்தினில் நிகழ்ந்திடும்
    சாதீயக் கொடுமையெல்லாம்
    நமக்குள் இல்லையடி
    நாமிருவர் என்றெண்ணுவார்
    நம்மை புறம் பார்ப்போர்
    நாமிருவர் அல்ல
    உணர்வால் உயிரால் ஒருவர் என
    நமக்குள் இருக்கட்டும்....


    அருமையான கவி வரிகள் சகோதரரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமாயணத்தை இரு வரிகளில் கூறு என்றானாம் மன்னன் கம்பனிடம். கம்பன் சொன்னானாம் "ராமன் பிறந்தான். ராவணன் மாண்டான்." என்று. உங்கள் கருத்தை பார்க்கையில் எனக்கு ஏனோ இது தோன்றியது. நன்றிகள் அண்ணா, வரவுக்கும் கருத்திடலுக்கும்.

      நீக்கு
  6. ஒரு பெண்ணைன் வர்ணிப்பே அதிகமாய்க் கிடக்கிறது.காதலும் சாதியால் தோற்றுவிட்ட காதலர்களும்...ஒரு சிறுகதைபோலவே கவிதை அமைஞ்சிருக்கு.வாழ்த்துகள் முகுந்தன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண் பெண்ணைத்தானே அதிகமாய் வர்ணிக்க முடியும்...(அப்படி இல்லையோ?!?!?! ஹிஹிஹி...)நன்றிகள் அக்கா. தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  7. கன்னியவள் வர்ணனையும் சாதியச்சாடலும் என இனிப்புத்தடவிய மருந்தாக சமூகநோக்குடன்கூடிய நல்லதொருகவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாம்ஸ். உங்கள் மேலான கருத்க்துக்கள் எங்களை வளப்படுத்தும். தொடர்ந்து வாருங்கள். கருத்திடுங்கள். நன்றிகள் மாமா.

      நீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.